Tuesday, January 31, 2012

கொங்குநாட்டு நாட்டுப்புறக் கதைகள்

ஒரு ஊர்ல மூணு அண்ணமாருங்க இருந்தாங்களாம் அவ‌ங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தாளாம். அந்த அண்ணமாருங்கள்ல பெருய அண்ணன் பைத்தியகாரனாம். ஒரு நாள் ஒரு ராச்சசன் அவ‌ங்கூட்டு வழியா போகும் போது தங்கச்சிகாரிய பாத்து அவளதூக்கீட்டு போயிட்டானாம். காட்டுக்கு போன அண்ணங்காரங்க திரும்பி ஊட்டுக்கு வந்து பாத்தா ஆத்தாகாரி அழுதுட்டு இருந்தாளாம், என்னான்னு கேட்டா கதைய சொன்னாலாம். சின்ன அண்ணனுக ரெண்டு பேரும் தங்கச்சிய காப்பாத்தா கெழம்புனானுகளாம் அப்ப பெரிய அண்ணனும் நானும் வரேன் அடம்புடுச்சானாம். ஆத்தாகாரி ஒடனே ஒரு யோசன பண்ணி, சின்ன அண்ணனுகளுக்கு கட்டி சோறும், பெரியண்ணணுக்கு கட்டிசோத்துக்கு பதிலா மாட்டு சாணிய கட்டி குடுத்துட்டாலாம், பாதிவழியில சோறுல்லாம பெரிய அண்ணன் திரும்பி வந்துருவான்னு. ஆனா இந்த சூதை பெரிய அண்ணன் எப்படியோ கண்டுபிடிச்சுட்டான். மூணு பேரும் கால்ந‌டையா தங்கச்சிய தேடி போனாங்களாம். அப்ப மூணுபேருக்கும் பசி எடுத்துச்சு. சாப்புட போனப்ப பெரிய அண்ணன் கை கழுவிட்டு சாப்புட சொன்னான். அண்ணன் தம்பிங்க கைகழுவ போனப்ப பெரிய அண்ணன் கட்டுசோத்து பொட்டலத்தை மாத்தீட்டான். சாப்புட கட்டு சோத்தை பிரிச்சு பாத்த‌ப்ப சின்ன அண்ணங்க ரெண்டு பேரும் ஏமாந்து போயிட்டாங்க. பெரிய அண்ணன் ஒடனே "சேரி எஞ்சாப்பாட்ட எல்லாரும் சாப்புடலாம் ஆனா எம்பேச்சு தான் கேக்கோனும்"னு சொன்னானாம்.சின்ன அண்ணனுக ரெண்டு பேரும் வேற வழியில்லாம சேரினு சொல்லீட்டு சாப்புட்டாங்கலாம். பொறவு எல்லாரும் மறுபடியும் நடந்து போனாங்களாம். அப்ப ஒரு கழுதை எதுக்கால வந்துச்சாம், பெரிய அண்ணன் அந்த கழுதைய புடிக்க சொன்னானாம். சின்ன அண்ணங்க முடியாதுனு சொன்னகாட்டி அவங்க தின்ன சோத்தை கக்க சொன்னானாம். வேற வழியில்லாம கழுதைய புடுச்சுச்சுட்டு போகும் போது பன மரம் ஒன்னு கெடந்துச்சாம். அதையும் எடுதுக்க சொன்னானாம் பெரியண்ணான். எடுக்கலைனா தின்ன சோத்த கக்க சொல்லுவாண்னு அதையும் தூக்கீடு நடந்தாங்களாம். இப்படியே போற வழியிலிருந்த வண்ணாந்தாளியையும், ஒரு கருவண்டையும் புடுச்சுட்டு ராச்சசன் ஊட்டுக்கு போயிட்டாங்களாம். அவங்க போன நேரம் ராச்சசன் எரை தேட பொயிருந்தானாம். அப்ப தங்கச்சிய பாத்து பேசிட்டு இருக்குறப்ப ராச்சசன் வர சத்தங் கேட்டுச்சு, தங்கச்சிகாரி ஒடனே மூணு அண்ணங்களையும் அவங்க கொண்டாந்த கழுதை, தாளி, பனை மரம், வண்டு எல்லாத்தையும் அட்டாரில ஏத்தி உட்டுட்டாலாம். ராச்சசன் வந்த ஒடனே மனுச வாசம் அடிக்குது யார் வந்தாதுனு தங்கச்சிய கேட்டானாம். சின்ன அண்ணானுக சொன்னதையும் கேக்காம பெரிய அண்ணன் " நாந்தான்" னானாம் அட்டரில இருந்து. யார் நீ உந்தாலைய காட்டுனு சொன்னானாம் ராச்சசன். பெரிய அண்ணன் வண்ணாந்தாளி தூக்கி நீட்டுனானாம், அதைபாத்து இவ்வளா பெரிய தலையானு ராச்சசன் பயந்துட்டானாம், பொறவு எங்கால பாக்குரயானு பனமரத்தை எடுத்து நீட்டுனானாம். அதக்கண்டு ரொம்ப பயந்துட்டானாம் ரச்சசன். பெரியண்ணான் அப்புறம் எஞ்சத்ததை கேளுனு கழுதை காதுல கருவண்ட உட்டுட்டானாம். அந்த சத்தத்தை கேட்டு நம்மளவிட பெரிய ராச்சசன் வந்துருக்கான்னு ஓடியே போயிட்டானான் ராச்சசன். அப்புறம் என்ன அண்ணாந்தங்கச்சி நாலுபேரும் கடசிவரைக்கும் சந்தோசமா இருந்தாங்களாம்